
திருவள்ளூர்
செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த கார் காவலாளர்கள் சோதனையில் நிறுத்தாமல் தப்பிக்க முயன்றபோது அதனை மடக்கி பிடித்து காவல் நிலையம் எடுத்துச் செல்ல முற்பட்ட போது திடிரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டை சோதனைச் சாவடியில் காவலாளர்கள் திங்கள்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று காவலாளர்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்றுவிட்டது.
உடனே, அந்த காரை மடக்கிப் பிடிக்குமாறு, தடா காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், தடா காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஸ்வர ராவ் மற்றும் காவலாளர்கள் காரை பிடிப்பதற்காக காத்திருந்தனர். ஆனால், அவர்களிடமும் சிக்காமல் அந்த கார் தப்பித்துவிட்டது.
பின்னர், அந்த காரை தடா காவலாளர்கள் பின் தொடர்ந்து விரட்டி சென்று ஆரம்பாக்கம் சோதனைச் சாவடி அருகே மடக்கிப் பிடித்தனர். அந்த காரில் வந்த ஒருவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் காவலாளர்களிடம் பிடிபட்டார்.
இதனைத் தொடர்ந்து காரில் சோதனை செய்தபோது, அதில் நான்கு செம்மரக் கட்டைகள் இருந்தன. இதைத் தொடர்ந்து காவலாளார்கள் அந்தக் காரை தடாவுக்கு கொண்டுச் செல்ல ஓட்டினர். சுமார் 100 மீட்டர் தூரம் சென்ற நிலையில், காரில் இருந்து அதிக அளவில் புகை வந்தது. இதனால், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, காவலாளர்கள் இறங்கினர்.
அப்போது கார், திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் காவலாளர்கள், கும்மிடிப்பூண்டி தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், போக்குவரத்தை ஒரு வழிப் பாதையில் மாற்றிவிட்டு, தீயை அணைக்க முற்பட்டனர், ஆனால், கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
செம்மரக் கடத்தல் கும்பலை பிடித்த சிறிது நேரத்திலேயே கார் தீப்பிடித்தால் காவலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.