
சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் நேற்று வெடி விபத்து நடந்தது. இதில் 6 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். 14 பேர் படுகாயத்துடன், சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார், கடை உரிமையாளர் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் விற்பனைக்காக இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தமிழகம் முழுவதும் உள்ள சிறு வியாபாரிகள் சிவகாசிக்கு வந்து இங்குள்ள மொத்த விற்பனை கடைகளில் பட் டாசுகளை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் அனைத்து பட்டாசு கடைகளிலும் அதிகளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
சிவகாசி-விருதுநகர் சாலை சின்னதம்பி நகரில் ஆனந்த் (38) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று மதியம் 1.30 மணிக்கு சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தயாரிக்கப்பட்ட பேன்சி ரக வெடிகளை ஒரு மினி லாரியில் ஏற்றிக் கொண்டு வந்தனர்.
ஆனந்த், கடையில் இருந்தவர்கள், பட்டாசுகளை இறக்கி கடையின் உள்ளே வைக்கும்படி கூறிவிட்டு, அதற்கான இடத்தையும் காட்டினர். இதைத்தொடர்ந்து அந்த மினி லாரியில் வந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் பட்டாசு பண்டல்களை கடையின் உள்ளே இறக்கி வைத்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக, மினி லாரியில் இருந்த பட்டாசுகள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதனால் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பட்டாசு பண்டல் களை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
மினி லாரியில் இருந்த பட்டாசுகள் தொடர்ந்து நாலாபுறமும் வெடித்துச் சிதறியதால் லாரி தீப்பிடித்தது. பட்டாசு கடைக்குள் தீப்பொறி பறந்து விழுந்ததால், அங்கிருந்த பட்டாசுகளும் தீப்பிடித்து வெடித்தன. இதனால் கடை ஊழியர் கள் வெளியே தப்பி ஓடினார் கள். பல அடி உயரத்துக்கு தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
பட்டாசுகள் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெடித்துக்கொண்டே இருந்ததால், அந்த பகுதியில் ஏற்பட்ட கரும்புகை மண்டலம் பட்டாசு கடையின் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவி 8 பேர் இறந்தனர். 14 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகாசி பட்டாசுக்கடை தீ விபத்து தொடர்பாக கடை உரிமையாளர், சுதந்திரநாதன், லாரி டிரைவர், சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.