புதிய மணல் குவாரியை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்; 2000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர்...

First Published May 7, 2018, 8:29 AM IST
Highlights
Signature movement emphasis to cancel new sand quarry


அரியலூர்

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள புதிய மணல் குவாரியை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் புதிய மணல் குவாரி கடந்த 4-ஆம் தேதி பலத்த காவல் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கம், அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர்  4-ஆம் தேதி பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். 

அதனைத் தொடர்ந்து சாலை மறியல், கண்டன ஊர்வலம், சுடுகாட்டில் குடியேறுதல், ஒப்பாரி வைத்தது போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காவலாளர்கள் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு கலைந்து சென்றனர். மேலும், புதிய மணல் குவாரி தொடங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமானூர் நகரில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள புதிய மணல் குவாரியை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 

இதில், கையெழுத்து பெறப்பட்ட படிவங்கள் தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

இந்த கையெழுத்து இயக்கத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கையெழுத்திட்டுள்ளனர். மேலும் புதிய மணல் குவாரி அமைக்க வேண்டாம் எனக் கூறி இலவச அழைப்பு எண் 1100 ஐ சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டு பதிவு செய்துள்ளனர்.

இந்த கையெழுத்து இயக்க போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் தனபால், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வடிவேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், 

ம.தி.மு.க. வாரணவாசி ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சி ராஜா, காங்கிரஸ் மகளிரணி மாரியம்மாள், வட்டார தலைவர் சீமான், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் தங்க ஜெயபாலன், 

மக்கள் சேவை இயக்கம் தங்க சண்முக சுந்தரம், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்று கையெழுத்து போட்டு சென்றனர்.  
 

click me!