எங்கு பார்த்தாலும் கடையடைப்பு; தி.மு.க.வினர் ஊர்வலம்; போலீஸ் பாதுகாப்பால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு...

First Published Aug 8, 2018, 8:05 AM IST
Highlights

காஞ்சிபுரத்தில் எங்கு பார்த்தாலும் கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்னையை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். 

கடந்த 11 நாள்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை உயிரிழந்தார். முதலில் அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்ற தகவல் மின்னல் வேகத்தில் பரவியது. இதனையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு கூட விடுமுறை அளித்து சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர். டாஸ்மாக் கடைகள் 6 மணிக்கே அடைக்கப்பட்டன. கடைகள், சந்தைகள் என அனைத்தும் மூடும்படி தி.மு.க.வினர் அராஜமாக வலியுறுத்தினர். இதனால் அவசர அவசரமாக கடைகள் அனைத்தையும் மூடிவிட்டனர்.

அனைத்து பணியாளர்களையும் பத்திரமாகவும், சீக்கிரமாகவும் வீட்டுக்கு போகச்சொல்லி அறிவுறுத்தப்பட்டதால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததை பார்க்க முடிந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சென்னைக்கு நிகரான பரபரப்பு இருந்தது.

சாலைகளில் வாகனங்கள் அதிகம் இயக்கப்படாமல் வெறிச்சோடின. பால், தயிர், காய்கறி, அரிசி போன்ற அன்றாடத் தேவைகளை வீட்டில் இருக்கும் பெண்களால் மட்டுமே வாங்கி வைக்க முடிந்தது. அவர்களுக்குள்ளும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.  கடைகள் சீக்கிரமே மூடப்பட்டதால் வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்களுக்கோ அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவலாளர்கள், ஊர்க்காவல் படையினர் நிறுத்திவைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கருணாநிதி இறந்த தகவல் டி.வி.யில் ஒளிபரப்பப்படும் போதெல்லாம் காஞ்சிபுரம் மாவட்டம் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் பெரும்பாலான இடங்களில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

click me!