கருணாநிதி இறந்த செய்தியை டி.வி.யில் பார்த்த மீனவர் சங்கத் தலைவர் மரணம்; அஞ்சலி செலுத்த கூடிய தி.மு.க.வினர்...

First Published Aug 8, 2018, 6:59 AM IST
Highlights

கருணாநிதி இறந்த செய்தியை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த மீனவர் சங்கத் தலைவரான தி.மு.க.வின் தீவிரத் தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம், தேவனேரி மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர் பாலு செட்டியார். 71 வயதான இவர் மீனவர் சங்கத் தலைவர். தி.மு.க.வின் தீவிரத் தொண்டன். தி.மு.க. சார்பில் நடக்கும் அனைத்துக் கூட்டத்திற்கும் தவறாமல் பங்கேற்பார். தி.மு.க. சார்பில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறைக்கும் சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று தொலைக்காட்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்தார் என்ற செய்தியை பார்த்ததும் அதிர்ச்சி தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டது.  வலியால் அலறிய பாலு செட்டியாரை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் சோதித்துப் பார்த்துவிட்டு பாலு செட்டியார் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதனைக் கேட்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மீனவர் சங்கத் தலைவர், தி.மு.க. தீவிரத் தொண்டர் பாலு செட்டியார் இறந்துவிட்டார் என்ற தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாய் பரவியது. தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் அன்பரசன், முன்னாள் மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவர் விஸ்வநாதன் மற்றும் தி.மு.க.வினர் பலர் பாலு செட்டியாரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பாலு செட்டியாரின் மறைவு தேவனேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

click me!