
விருதுநகரில் சர்வதேச தரம் வாய்ந்த ஹாக்கி வீரர்களுக்கு தளம், தூத்துக்குடியில் நீச்சல் குளம் ஆகியவற்றை ஜெயலலிதா கட்டியதால் தான், ஒலிம்பிக் போட்டிக்கு செல்லக்கூடிய வகையில் வீரர்கள் உருவாகி வருகிறார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் நகர அதிமுக பேரவை சார்பில் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 10-ஆம் தேதி மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இது ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதற்கு நகர பேரவைச் செயலாளர் வி.செல்வராஜ் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கதிர்வேல் வரவேற்றார்.
இந்தப் போட்டியில் கரூர் வெங்கமேடு பிசிசி அணி முதலிடத்தையும், 2 ஆம் இடத்தை திருச்சி என்ஐஐசி அணி, 3 ஆம் இடத்தை திருச்சி கேலக்ஸி அணி ஆகியவை பிடித்தன.
வெற்றிப் பெற்ற அணிகளுக்கு விருது வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:
“கல்விக்காக 24 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியவர் ஜெயலலிதா.
தேர்தல் வாக்குறுதியின்போது கூறிய திட்டங்களை 100 சதவீதம் நிறைவேற்றினார்.
மாணவர்கள் கல்வியறிவு பெற்றால் மட்டும் போதாது, விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக விளையாட்டுக்கென்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா விருதுநகரில் சர்வதேச தரம் வாய்ந்த ஹாக்கி வீரர்களுக்கு தளம், தூத்துக்குடியில் நீச்சல் குளம் ஆகியவை அமைத்ததால், இன்று சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லக்கூடிய வகையில் வீரர்கள் உருவாகி வருகிறார்கள்” என்றுத் தெரிவித்தார்.
இதில், மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர். காளியப்பன், நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், மீனவரணி செயலாளர் சுதாகரன், ஆரியூர் சுப்ரமணியன்,சேரன் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.