
நாமக்கல்
நாமக்கல்லில் பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றி வந்த லாரி, எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவரில் மோதி சொருகியதில், லாரி ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோட்டில் இருந்து பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை புதுச்சத்திரம் அருகே உள்ள உண்ணாநத்தம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (50) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த லாரி நாமக்கல் வடக்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்புசுவரில் மோதியது. இந்தத் தடுப்புச்சுவர் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மோதலில் லாரியின் முன்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் டிரைவர் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை மீட்டு, அப்பகுதியில் உள்ளவர்கள் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து நல்லிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டதால், எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று அப்பகுதியில் இருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.