
சிறையில் இருந்து சசிகலா வெளியே வர தான் நரபலி கொடுத்துள்ளேன் எனவும், கூடு விட்டு கூடு பாயும் சக்தியை பெற்றுள்ளேன் எனவும், மதிரவாதி ஒருவர் கூறியது போலீசாரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 10-ந்தேதி பெரம்பலூர் எம்.எம். நகரில் உள்ள பங்களா வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் அதிரடியாக வீட்டின் உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களுக்கு பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறி இருப்பது தெரியவந்தது.
வீட்டின்அனைத்து அறைகளிலும் 20-க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள், மந்திர தகடுகள், மாந்திரீகம் தொடர்பான புத்தகங்கள், மை டப்பாக்கள், ஆண்மை விருத்தி மற்றும் ஆஸ்துமா நோய்க்கு பயன்படுத்தப்படும் 40 கடல் குதிரைகள், ஆவிகளுக்கான சிலைகள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியுற்றனர்.
மேலும் மரப்பெட்டி ஒன்றில் அழுகிய நிலையில் பெண்ணின் உடலும் இருந்தது. இதையடுத்து மந்திரவாதி கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி நசீமா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மந்திரவாதி கூறியதாவது :
எனக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுங்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்கான அகோரி பூஜையின் உச்சக்கட்டத்தில் உள்ளேன்.
அதற்காக இளம்பெண்ணின் பிணத்தின் மீது அமர்ந்து பல்வேறு பூஜைகள் செய்து எனது மாந்திரீக சக்தியை பெருக்கிக்கொண்டேன்.
கூடு விட்டு கூடு பாயும் நேரம் பார்த்து நீங்கள் என்னை கைது செய்துவிட்டீர்கள்.
நான் இந்த இடத்தை விட்டு வெளியே சென்றுவிட்டால் மீண்டும் அந்த சக்தியை பெறுவது கடினம்.
விரைவில் சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வரும் முயற்சிக்கு வாய்ப்பு தாருங்கள்.
சசிகலாவை முதல்வராக்க நரபலி கொடுத்துள்ளேன்.
தன்னிடம் 2 ஆயிரம் ஆவிகள் உள்ளன. அதனை யார் மீது வேண்டுமானாலும் ஏவலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கார்த்திகேயனை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.