முத்து கிருஷ்ணன் மர்மசாவு: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு

First Published Mar 15, 2017, 6:20 PM IST
Highlights
Muthu Krishnan marmacavu Abuse Prevention Act Prosecutions - Delhi Police serious investigation


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழக மாணவர் முத்து கிருஷ்ணன் மர்மமாக இறந்தது தொடர்பாக, தற்கொலைக்கு தூண்டியது, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூக்கு

தமிழகம், சேலத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். தலித் பிரிவைச் சேர்ந்த இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் நவீன வரலாறு படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது தென் கொரிய நண்பர் வீட்டில் ஒரு அறையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.

சமூக பிரச்சினையில் ஈடுபாடு

படிப்பிலும், சமூக பிரச்சினைகள், பல்கலைக்கழக விசயங்களில் மிகவும்ஈடுபாடுடன் செயல்பட்ட முத்து கிருஷ்ணன் மர்மசாவு மாணவர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் சாவில் மர்மம் இருப்பதாவும் தெரிவித்தனர். 

ஐதராபாத் பல்கலையில் தற்கொலை செய்து கொண்ட ரோகித்வெமுலாவுக்கு நீதி கேட்கும் இயக்கத்திலும் முத்துகிருஷ்ணன் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். டெல்லி ஜே.என்.யூ. பல்கலையின் நிர்வாகச் சீர்கேடுகள், தாழ்த்தப்பட்ட மாணவர்களை ேசர்க்கையில் பாகுபாடு ஆகியவை குறித்தும் கடுமையாக தனது பேஸ்புக்கில் எழுதியிருந்தார்.

பெற்றோர் குற்றச்சாட்டு

முத்துக்கிருஷ்ணனின் பெற்றோர்களும், தங்கள் மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யக் கோரியும் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால், டெல்லி போலீசார் முத்துகிருஷ்ணன் சாவை தற்கொலை என்றே கூறி வந்தனர்.

உடற்கூறு ஆய்வு

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முத்துகிருஷ்ணனின் உடலை, 5 மருத்துவர்கள் குழு நேற்று உடற்கூறு ஆய்வு செய்தனர். இந்த உடற்கூறு ஆய்வு அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

அமைச்சர் ஆறுதல்

முத்துகிருஷ்ணன் பெற்றோர்களை நேற்று சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார், அப்போது, இந்த மர்மசாவு குறித்து எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமைச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய டெல்லி போலீசாருக்கு உத்தரவிடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

வழக்குப்பதிவு

இது தொடர்பாக டெல்லியின் மூத்த போலீசார் ஒருவர் கூறுகையில், “ முத்துகிருஷ்ணன் மர்மசாவு தொடர்பாக, தற்கொலைக்கு தூண்டியதாகவும், எஸ்.டி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். தீவிர விசாரணையும் நடந்து வருகிறது'' என்றார்.

click me!