
ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் தேமுதிக வேட்பாளராக மதிவாணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை காலை 11 மணிக்கு வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைதேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான மனுதாக்கல் நாளை தொடங்குகிறது.
அ.தி.மு.க.வில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆட்சி மன்ற குழுவை மாற்றி அமைத்து துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதே போல் ஓ.பி.எஸ். அணியிலும் வேட்பாளரை தேர்வு செய்ய புதிதாக ஆட்சிமன்ற குழு அமைக்கப்பட்டு ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஆர்.கே.நகர் இடைதேர்தலில் தேமுதிக வேட்பாளராக மதிவாணனை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் மதிவாணன் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து நின்று 3-வது இடம் பிடித்தார்.
இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு மதிவாணன் தேமுதிக சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளார்.