
கோவில்பட்டி
விளாத்திகுளம் அருகே, சசிகலா ஆதரவு அதிமுக பிரமுகரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாய் இருந்த தீபா ஆதரவு, முன்னாள் யூனியன் துணை தலைவர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் நேற்றுச் சரணடைந்தார். கொலை செய்ததற்கான காரணம் குறித்து சரணடைந்தவரை காவலில் எடுத்து விசாரணை காவலாளர்கள் திட்டம்.
விளாத்திகுளம் அருகே, அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் யூனியன் துணை தலைவர் கோவில்பட்டி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேல்மாந்தையைச் சேர்ந்தவர் முனியசாமி (45). அதிமுக பஞ்சாயத்து செயலாளராக இருந்தார். இவர், சசிகலாவுக்கு ஆதரவு.
அதே பகுதியைச் சேர்ந்தவர் இரத்தினவேலு (65). முன்னாள் யூனியன் துணை தலைவர். இவர், தீபாவுக்கு ஆதரவு.
இவர்கள் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக முன்விரோதம் இருந்தது.
திங்கள்கிழமை அன்று, முனியசாமி விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்துக்குச் சென்றார். பின்னர் அவர் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள சிறுநீர் கழிப்பிடத்துக்குச் சென்றார்.
அப்போது அங்கு பின்தொடர்ந்து வந்த ரத்தினவேலு கத்தியால் முனியசாமியை காட்டுத்தனமாக குத்திக் கொலைச் செய்தார்.
முனியசாமியின் உடலில் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட எட்டு இடங்களில் ஆழமான கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இதுகுறித்து விளாத்திகுளம் காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து, தலைமறைவான ரத்தினவேலுவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரத்தினவேலு, கோவில்பட்டி முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று காலையில் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைத்து, வருகிற 10–ஆம் தேதி விளாத்திகுளம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நீதிபதி ஜெயசுதாகர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் கோவில்பட்டி துணை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட முனியசாமியின் உடற்கூராய்வுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அவருடைய உடல் நேற்று சொந்த ஊரான மேல்மாந்தையில் அடக்கம் செய்யப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து ரத்தினவேலுவை காவலில் எடுத்து விசாரணை நடத்தும் திட்டத்தில் விளாத்திகுளம் காவலாளர்கள் இருக்கின்றனர்.