
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு எடுத்துச் சென்ற விசைப்படகு திடீரென தீப்பிடித்ததில் எரிந்து சாம்பலாயின. விசைப்படகில் இருந்த ஐந்து மீனவர்கள் கடலில் குதித்ததால் உயிர் பிழைத்தனர்.
தூத்துக்குடியில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. அந்த படகில் இருந்த 5 மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.
தூத்துக்குடி செயிண்ட் ஜார்ஜ் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசிங் (52). இவர், தனது சிறிய விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த பிச்சையா மகன் ஆரோக்கியராஜ் (46), ஜோசப் மகன் ஜீனஸ் (46), மிக்கேல் மகன் அமல்ராஜ் (45), அந்தோணிசாமி மகன் கார்த்தி (32) ஆகியோருடன் நேற்றுச் காலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து சுமார் ஒன்றரை கடல் மைல் தொலைவில் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரத்தில் இருந்து தீப்பொறி பறந்தது. நொடிப்பொழுதில் அந்த தீப்பொறி அருகில் இருந்த டீசல் டேங்கில் விழுந்தது. இதனால், தீ மளமளவென படகு முழுவதும் பரவிற்று. படகில் இருந்த ஐந்து மீனவர்களும் அச்சம் அடைந்தனர்.
வேறு வழியின்றி படகிலிருந்து ஐந்து பேரும் கடலில் குதித்தனர். அலறிவாறு கடலில் அவர்கள் தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நாட்டுப்படகு மீனவர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த ஐந்து மீனவர்களையும் மீட்டனர். நல்ல வேளையாக மீனவர்கள் காயம் ஏதுமின்றித் தப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மீனவர்கள் மற்றொரு விசைப்படகில் சென்று தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்த விசைப்படகை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.
மீன்பிடி துறைமுகத்தில் தயார் நிலையில் நின்ற தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் படகின் பெரும் பகுதி எரிந்து கடலிலேயே சாம்பலானது. படகில் இருந்த வலைகளும் எரிந்து நாசமாயின. இதன் சேத மதிப்பு பல இலட்சம் ரூபாய் இருக்கும்.
இது குறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு காவலாளர்கள் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.