சக்தி அம்மன் வேடமிட்ட சிறுமிகள் பிரதமர் மோடிக்கு சேலத்தில் வரவேற்பு!

By Manikanda Prabu  |  First Published Mar 19, 2024, 3:37 PM IST

பெண்கள் சக்தியை எடுத்துரைக்கும் வகையில், சேலத்தில் பிரதமர் மோடிக்கு அம்மன் வேடமிட்ட சிறுமிகள் வரவேற்பு அளித்தனர்


நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஏற்கனவே, திருப்பூர், சென்னை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் முதல் முறையாக நேற்று கோவையில் நடந்த பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நேற்று இரவு கோவையில் தங்கிய பிரதமர் மோடி, இன்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு சென்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதன், பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

அதன்பிறகு, சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். கோட்டை மாரியம்மனை வணங்கி தனது பேச்சை துவக்குவதாக தெரிவித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி விட்டதாக தெரிவித்தார்.

முன்னதாக, பிரசார மேடைக்கு வந்த பிரதமர் மோடியை கூட்டணி கட்சித் தலைவர்கள் சால்வை  அணிவித்து வரவேற்றனர். அதன்பிறகு, சக்தி அம்மன் வேடமிட்ட சிறுமிகள் 11 பேர் மேடையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். இதன்போது, பாஜக தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் உடனிருந்தார்.

இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில், “நாட்டில் ஒருபுறம் பெண்கள் மீதான தாக்குதல்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், பிரதமரின் சேலம் பேரணியில் பெண்கள் சக்தியை மதிக்கும் ஒரு தனித்துவமான செயலை பாஜக செய்து காட்டியுள்ளது. பிரதமருக்கு 11 சக்தி அம்மாக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சக்தி தெய்வங்களின் அடையாளமாகவும், பெண்கள் சக்தியின் அடையாளமாகவும் 11 சிறுமிகள் மேடையில் ஏறி பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.” என தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி விட்டது: பிரதமர் மோடி சாபம்!

பிரதமர் மோடி பெண்கள் சக்தியை (Nari Shakti) பற்றி தொடர்ந்து பேசி வரும் நிலையில், சக்தி தெய்வங்களின் அடையாளமாக அம்மன் வேடமிட்ட சிறுமிகள் அவருக்கு மேடையிலேயே வரவேற்பு அளித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

click me!