
தனியாக சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை பொதுமக்கள் அடித்து துவைத்த சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.
திருப்பூர், பாண்டியன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த பெண்ணை, வாலிபர் ஒருவர் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த பெண், யாரும் இல்லாத தெருவில் சென்று கொண்டிருந்த போது, அந்த வாலிபர் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இதனால், பதறிய அந்த பெண், கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனைக் கேட்ட அருகில் இருந்தவர்கள், சம்பவ இடத்துக்கு வந்தனர். மக்கள் கூட்டம் வருவதை பார்த்த அந்த வாலிபர், அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.
ஆனால், அப்பகுதி மக்கள், வாலிபரை விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அந்த வாலிபரை, கையால் அடித்தும், கால்களால் உதைத்தும், கம்பால் அடித்தும் பொதுமக்கள் தாக்கினர்.
அடி வாங்கிய அந்த வாலிபர் கதறியபடி, மன்னித்துவிடும்படி கூறியுள்ளார். ஆனாலும், அங்கிருந்த பெண்கள் தொடர்ந்து வாலிபரை, ஆத்திரம் தீர அடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி போலீசார், வாலிபரை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபரை, பொதுமக்கள் தாக்கிய வீடியோ தற்போது வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.