அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மற்றும் சட்டவிரோத கைது ஆகிய இரண்டு வழக்குகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியின் பேரில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஆகஸ்ட் 8 முதல் 12ஆம் தேதி வரை அமலாக்கத்துறை விசாரித்தது.
மறைந்த என்.டி.ராமாராவின் ரூ.100 நினைவு நாணயத்தை வெளியிட்ட குடியரசுத்தலைவர்!
அதன்பிறகு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அன்றைய தினமே அவர் மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையையும், 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை எம்பி எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அது மேலும் 3 நாட்கள் அதிகரிக்கப்பட்டது. அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், எம்.பி, எம்.எல்.ஏக்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், குற்றப்பத்திரிக்கை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகலை தனக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அடுத்த முறை செந்தில் பாலாஜியை நேரில் அஜர்படுத்த வேண்டாம் எனவும், காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தினால் போதும் என்றும் நீதிபதி தெரிவித்தார். அவரிடம் குற்றப்பத்திரிக்கை நகலும் அளிக்கப்பட்டது.
அத்துடம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஜாமீன் மனு தாக்கல் செய்தாலும், தன்னால் அதை விசாரிக்க முடியாது என்றும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகவும் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி அறிவுறுத்தியுள்ளார்.