
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். கோவை விமான நிலைத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் அவர்களது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.
நிர்வாகிகளின் கருத்தின் அடிப்படையில் 2 நாட்களில் நல்ல முடிவு எடுக்க இருக்கிறார்கள். எந்த காலத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கிற அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளப் போவதில்லை என பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். விரைவில் அவர் நல்ல முடிவை எடுப்பார். காங்கிரஸ், தவெக இணைவது குறித்த கருத்துகள் இப்போதைக்கு இல்லை. டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உட்பட ஒவ்வொருவரும், ஒவ்வொருவரோடு கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டிருப்பது உண்மை தான்.
அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை படுபாதாளத்தில் தள்ளியுள்ளனர். இன்றைக்கு அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் வெம்பி வதங்கி என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையை உருவாக்கிய பழனிசாமிக்கு வருகின்ற காலங்களில் நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்பது தான் இன்றைய சூழல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற ஒற்றை சொல்லை நிறுத்தி வருகை புரிந்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.