
நாகூர் ஹனீபாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஹனீபா உடலால் மறைந்தாலும், அவரின் குரல் நம்முடைய உள்ளத்திலும் உணர்விலும் ஒலித்துகொண்டேதான் இருக்கிறது. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னதை, என்னுடைய அன்பிற்கிய லியோனி அவர்கள் நினைவுபடுத்தினார். “ஹனி என்றால் தேன். பா என்றால் பாட்டு. தேனாக இனிக்கும் பாட்டை பாடும் அவருக்கு ஹனிபா என்ற பெயர் பொருத்தமானது''. அதேபோல, “ஹனிபாவுக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை” என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். அப்படி ஒரு குரல் வளம் ஹனிபா அவர்களுக்கு. இறுதிவரை அந்த குரல் அதே உறுதியோடு இருந்தது அவருக்கே உரிய சிறப்பு!
ஒரு கலைஞன், ஒரு இயக்கத்தின் மேல் எவ்வளவு பற்றுடன் இருந்து, அந்த இயக்கத்திற்காக எந்தளவிற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட்டார் என்பதற்கு, அய்யா ஹனிபா அவர்களுடைய வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு!
நாகூரில் ஹனிபா அவர்கள் கட்டிய இல்லத்திற்கு, “கலைஞர் இல்லம்” என்று பெயர் வைத்தார். அதை கலைஞர் தான் திறந்து வைத்தார். இப்படி கழக மேடைகளில் பாட்டு பாடியதால் மட்டுமா ஹனிபா அவர்களை கொண்டாடுகிறோம்? பாடுவது, அவரின் திறன்! கொண்ட கொள்கைக்காக சிறைக்கு போகவும் தயங்காதவர் தான் ஹனிபா அவர்களின் குணம்!
1957 தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்த அய்யா ஹனிபா அவர்களை, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சரான பிறகு, M.L.C.-யாக மேலவையில் அமர வைத்து அழகு பார்த்தார். கலைமாமணி விருது கொடுத்தார். வக்ஃபு வாரியத் தலைவராக நியமித்தார். 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் “கலைஞர் விருது” வழங்கினார்.
ஒருமுறை ஹனிபா அவர்கள் என்ன சொன்னார் என்றால், ”கழக நிகழ்ச்சிகளுக்கு, கலைஞர் என்னிடம் தேதிகூட கேட்காமல், என்னுடைய இசைக் கச்சேரியை வைத்துவிடுவார். ஏன் என்றால், நான் கச்சேரிக்காரன் கிடையாது; கட்சிக்காரன்” என்று சொன்னார்.
மற்றொரு பேட்டியில், “என்னுடைய இரத்தத்தை எடுத்து சோதித்தால்கூட அதில் வேறு கட்சியின் கலப்பு இருக்காது” என்று சொன்னார். அதனால்தான், அய்யா ஹனிபா அவர்கள் நிறைவுற்றபோது, மறைந்தபோது, தலைவர் கலைஞரும், நானும் ஓடோடி சென்றோம். அதைத்தொடர்ந்து, நாகூரில் நடைபெற்ற, அவரது படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கெடுத்து புகழஞ்சலி செலுத்தினேன்" என்று பேசினார்.