
அதிமுகவில் தங்களை இணைக்க வேண்டும் என கடந்த மாதம் வரை அடம் பிடித்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனது நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கூட்டணியில் இணைத்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
மேலும் சென்னையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக, அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு 23 தொகுதிகள், அமமுகவுக்கு 6 தொகுதிகள், பன்னீர்செல்வத்துக்கு 3 தொகுதிகள் ஒதுக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற அதே நாளில் மாலை நேரத்தில் அதிமுக உரிமை மீட்பு கழகத்தின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பன்னீர்செல்வம் பழனிசாமி என்ற பெயரை உச்சரிக்கவே வெட்கமாக இருக்கிறது, பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இணைய மாட்டோம் என ஆவேசமாகப் பேசினார். முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமி என்ற குரங்கின் கையில் அதிமுக என்ற பூமாலை சிக்கி உள்ளது.
அதில் இருந்து பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உட்பட பல பூக்கள் பிடிங்கி எறியப்பட்டுள்ளதாக காட்டமாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்துக் கணிப்பில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் இடம் பெறலாம் என கேட்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் 80ல் 72 மாவட்டச் செயலாளர்கள் தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்துள்ளனர். தவெக கூட்டணியில் சுமார் 38 தொகுதிகள் வரை கேட்டுப் பெறலாம் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நிர்வாகிகளின் கருத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ள பன்னீர்செல்வம் விஜய்யுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.