
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நிகழ்ந்த சமயத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ராணுவ வீரர்கள் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில், சர்ச்சை கருத்து தொடர்பாக செல்லூர் ராஜூ மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்திய நாட்டை, கண்களை இமை காப்பது போல் பாதுகாக்கும் எனது உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் எப்போதும் வணங்குபவன். அவர்களின் தியாகத்தை போற்றுபவன். எனது செய்தியாளர் சந்திப்பில் திமுகவின் பேரணி குறித்து கேட்டபோது, அது ஒரு நாடகம் என்றும், அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகமாடுகிறார்கள் என்றும் கூறினேன். ஆனால், திமுக தொலைக்காட்சிகள் எனது பேச்சை திரித்து ஒளிபரப்பிவிட்டன. உடனடியாக எனது எக்ஸ் தளத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்தேன். இருப்பினும், ராணுவ வீரர்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். எனது குடும்பம் முன்னாள் மற்றும் இன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.