
அற்ப அரசியலுக்காக மாநிலத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தியதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டயுள்ளார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய 'தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' புத்தக வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நூலை வெளியிட்டுப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், மத்திய அரசு ரூ.2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்கவில்லை என்றார்.
"பாஜக தலைமையிலான மத்திய அரசு தனது அற்ப அரசியலுக்காக தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை நிறுத்தியுள்ளது" என்று முதல்வர் குற்றம் சாட்டினார். மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்காததை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆளுநர் வழக்கில் மாநிலத்தின் வெற்றியைப் போலவே, மசோதாக்களுக்கு ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்தது போல, கல்வி நிதி தொடர்பான விஷயத்திலும் தமிழ்நாடு வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவதற்கான போராட்டம் தொடரும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றாவிட்டால், அது எட்டாக்கனி ஆகிவிடும் எனவும் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.