
சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு ஒத்தி வைப்பு….
கருப்பு பணம் பதுக்குவதை தடுக்கும் வகையில் உயர் மதிப்பு கொண்ட நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த மாதம் 8 ஆம் தேதி அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கோடிக்கணகான கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை தியாகராயநகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது கணக்கில் வராத ரூ.131 கோடி ரொக்கப்பணம், 171 கிலோ தங்கம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது.
இந்தியாவிலேயே அதிக பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட இந்த விவகாரம் தொடர்பாக சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகளான சீனிவாசரெட்டி, பிரேம் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் முடிவில் சேகர் ரெட்டி மற்றும் சீனிவாச ரெட்டி, ரத்தினம், ராமச்சந்திரன் உள்ளிட்ட 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் இந்த 5 பேரும் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு முதன்மை நீதிமனறத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வரும் செவ்வாய் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். மேலும் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சார்பில் போடப்பட்ட மனுவையும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.