நடிகை விஜயலட்சுமி புகார்: சீமான் ஆஜராகவில்லை!

By Manikanda Prabu  |  First Published Sep 12, 2023, 11:17 AM IST

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், சீமான் ஆஜராகவில்லை


தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்த சீமான், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக 2011ஆம் ஆண்டில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். வாழ்த்துகள் திரைப்படத்தின் போது, 2007ஆம் ஆண்டில் சீமானுடன் தனக்கு உறவு ஏற்பட்டதாக கூறும் நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2011ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன்பின்னர் இந்த விவகாரம் அப்படியே நீர்த்துப் போன நிலையில், தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. சீமானை கைது செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி அண்மையில் புகார் அளித்தார். அதிமுக ஆட்சியில் சீமானை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், சீமான் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை

மேலும், நடிகை விஜயலட்சுமி அண்மையில் அளித்த அந்த புகாரில், சீமானின் கட்டாயத்தால் தனக்கு ஏழு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. அதனடிப்படையில், விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்திலும் நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அத்துடன், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக,  நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அனுப்பிய அந்த சம்மனில் காலை 10.30 மணிக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், சீமான் ஆஜராகவில்லை. அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலர் சங்கர் தலைமையில் வழக்கறிஞர் குழுவினர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கர், “சில பல காரணங்கள் காரணமாக எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் இன்று நேரில் ஆஜராக முடியவில்லை.  இது தொடர்பாக சீமான் கொடுத்த 2 பக்க விளக்க கடிதம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டில் அளித்த புகார் தொடர்பாக சமாதானமாக செல்வதாக கூறியதையடுத்து, இந்த வழக்கு ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றத்தில் ஒப்புதல் ஏதேனும் பெறபட்டுள்ளதா என்றும் கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். இது தொடர்பாக ஆலோசித்து விளக்கம் அளிப்பதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறை விளக்கம் கிடைத்தபின் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க சீமான் தயாரக உள்ளார்.” என்று தெரிவித்தார்.

click me!