
தமிழகத்தைப் போன்று கேரளாவிலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு கேரளாவிலும் கணிசமான ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் அண்மையில் 14 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் கொச்சியில் ஆலோசனையும் மேற்கொண்டனர்.
இந்நிலையில் கே.சி.வேணுகோபால் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை சந்தித்து ஆதரவு கோர திட்டமிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அவர் அண்மையில் சென்னைக்கு வந்தார். அவரது வருகை தொடர்பாக ரகசியம் காக்கப்பட்ட நிலையில் இறுதி நேரத்தில் அது கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சலசலப்பு ஏற்படவே விஜய்யை சந்திக்கும் முடிவை மாற்றிக் கொண்ட வேணுகோபால் தனியார் விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார். மேலும் தன்னை சந்திப்பதற்காக யாரும் விடுதிக்கு வரவேண்டாம் என கடிந்து கொண்டாராம்.
அதன் பின்னர் விடுதியில் இருந்தவாறு விஜய்யிடம் வேணுகோபால் தொலைபேசி வாயிலாக ஆதரவு கோரியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கேரளா காங்கிரஸ் கட்சிக்கு தவெக ஆதரவு அளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கக்கூடிய நிலை ஏற்படலாம் என்பதால் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளனவாம்.