அரசு வேலை மட்டும் அல்ல… தனியார் வேலைக்கும் வழிகாட்டும் மையங்கள்! அரசு சொன்ன குட் நியூஸ்

Published : Dec 23, 2025, 09:49 AM IST
college student

சுருக்கம்

தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்கள், தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட்டு, போட்டித்தேர்வு பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் ஆன்லைன் சேவைகள் மூலம் இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறை வேலைகளைப் பெற உதவுகின்றன. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வரம்பிற்கு உட்படாத அனைத்து தற்காலிக மற்றும் நிரந்தர பணி நியமனங்களும், அரசிடமிருந்து நிதி உதவி பெறும் தொழில் நிறுவனம், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், விடுதிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் பணி நியமனங்களும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், ஒன்றிய அரசின் அனைத்து துறைகளும், பொதுத்துறை பணிக்காலியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களுக்கு அறிவிப்பு செய்வதோடு மட்டுமின்றி, பத்திரிக்கைகளிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து மாநில அரசுகளும் மேற்படி தீர்ப்பின் அறிவுரைகளை தவறாது பின்பற்றவேண்டும் என ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையில், அரசாணை (நிலை) எண்.44, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, நாள்.11.03.2015-இல் உச்சநீதிமன்ற ஆணைகளை பின்பற்றுமாறு மாநில அரசால் ஆணையிடப்பட்டது. மேற்கண்ட தீர்ப்புகள் மற்றும் அரசாணையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது.

மேற்கூறிய ஆணைகளின் அடிப்படையில், பொதுத்துறை பணிக்காலியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் பரிந்துரைக்கப்படும் பட்டியல்கள் மற்றும் விளம்பரம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு மனுதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமானது 2019-ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் என பெயர் மாற்றம் பெற்று, பரிந்துரைப்பணி அல்லாது மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பணிகளையும் சிறப்புடன் செய்து வருகிறது.

இம்மையங்களின் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் போன்ற பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள், தினசரிகள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவற்றினை மாணவர்கள் பயன்படுத்தி வருவதுடன், இலவச பயிற்சி வகுப்புகள் நேரடியாகவும், இணைய வழியாகவும், நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசால் ஆண்டொண்டிற்கு ரூ.4.22 கோடி செலவிடப்படுகிறது, இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக 07.05.2021 முதல் 30.09.2025 வரை 6,891 மாணவர்கள் பல்வேறு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும், இத்துறையால் மெய்நிகர் கற்றல் இணையதளம் https://tamilnaducareerservices.tn.gov.in செயல்படுத்தப்பட்டு, இதுவரை இவ்விணையதளத்தில் 5,25,910 தேர்வர்கள் பதிவு செய்துள்ளனர், 1,140 மென்பாடக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதுபோன்று, கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 20.03.2022 முதல் ஒளிபரப்பப்பட்டு, இதுவரை 1870 மணிநேர இலவச பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் இத்துறையின் TN Career Services YouTube சேனலிலும் பதிவேற்றப்பட்டுள்ளன.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் மாதந்தோறும் ஒரு வேலைவாய்ப்பு முகாமும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. 07.05.2021 முதல் 27.10.2025 வரை, 349 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் 1,990 சிறிய வேலைவாய்ப்பு முகாம்கள் என மொத்தம் 2,339 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதனால் 4,798 மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் உட்பட 2,78,619 வேலைநாடுநர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கென அரசு ஆண்டுதோறும் ரூ. 3.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.

தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் (www.tnprivatejobs.tn.gov.in)16.06.2020 அன்று தொடங்கப்பட்டு, இவ்விணையதளத்தில் 4,76,743 வேலை நாடுநர்களும், 10,935 வேலையளிப்பவர்களும் பதிவு செய்துள்ளனர். 42,637 நபர்கள் பணிநியமனம் பெற்றுள்ளனர். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் பதிவு செய்து உயிர் பதிவேட்டில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் காத்திருக்கும் பொது வேலைநாடுநர்களுக்கும் மற்றும் ஓராண்டிற்கு மேல் காத்திருக்கும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 12,125 பொதுப் பயனாளிகளும் 2,237 மாற்றுத்திறனாளி பயனாளிகளும் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றிட, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைப்பு பாலங்களாக செயல்பட்டு வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எமிஸ் தளத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் பயன்கள் என்னென்ன?
ஸ்டாலின் அவர்கள் இப்போது புதுச்சேரியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி பேச்சு