
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் 2–வது நாளாக கடல் சீற்றம் ஏற்பட்டதால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள் கடலின் நடுவே பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தையும், புகழ்பெற்ற திருவள்ளுவர் சிலையையும் படகில் சென்று பார்வையிட வருகை தருகின்றனர்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படகுகள் நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும். கடலில் சூறாவளி காற்று, கடல் சீற்றம், கொந்தளிப்பு போன்ற இயற்கை மாற்றங்கள் வரும் போது படகு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும்.
கன்னியாகுமரியில் அடிக்கடி கடல் உள்வாங்குதல், கடல் நீர் மட்டம் உயர்வு, சூறாவளி காற்று வீசுதல் போன்றவை நடந்து வருவதால் படகு போக்குவரத்து அடிக்கடி ரத்து செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் படகு போக்குவரத்துத் தொடங்கியதும் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டதால் படகு போக்குவரத்து மதியம் வரை நிறுத்தப்பட்டது. மதியத்திற்கு பின்பு படகுகள் மீண்டும் இயக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வழக்கம்போல விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் படகுதுறையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
காலை 9.45 மணியளவில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டு கடலில் இராட்சத அலைகள் எழுந்து ஒன்றன்பின் ஒன்றாக கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. இதனால், படகு போக்குவரத்து இரத்து செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி, விவேகானந்தர் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அவசரமாக படகுகள் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், மதியம் 2 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது.