சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்ட தாய்ப்பால் விற்பனை செய்யும் மையத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கிருந்து 50க்கும் மேற்பட்ட பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட தாய்ப்பால் விற்பனை
தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னை மாதவரம் பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால்கள் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த மருந்துக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாதவரம் பகுதியில் முத்தையா என்பவருக்கு சொந்தமான லைப் வேக்சின் ஸ்டோர் என்கின்ற பெயரில் மருந்து மொத்தம் மற்றும் சில்லறை வணிக மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்து வணிக மையத்தினை சென்னை மாதவரம் தபால் பெட்டி பகுதியை சேர்ந்த முத்தையா என்பவர் நடத்தி வருகிறார்
பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை
இந்த நிலையில் இவரது மருந்து கடையில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட லைப் வேக்சின் ஸ்டோர் என்ற மருந்து கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த திடீர் சோதனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால்கள் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பாட்டில்களை பறிமுதல் செய்த திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் முத்தையாவிலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மெடிக்கல் ஷாப்பிற்கு சீல்
மேலும் லைப் வேக்சின் ஸ்டோருக்கு தாய்ப்பால்கள் எங்கிருந்து எப்படி கிடைத்தது.? இதனை எப்படி இவர் பதப்படுத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தார் என்பது குறித்து எல்லாம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இவர் விற்பனை செய்து வந்த லைப் வேக்சன் என்கின்ற மருந்து மொத்த வணிக மையத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு கைப்பற்றப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பாட்டில்களை தற்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனைக்காக அரசு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்ததாக தெரிய வருகிறது.