தேனியில் கல்லூரி படிப்பு செலவுக்காக பகுதிநேர வேலைக்குச் சென்ற மாணவன் பராமரிப்பில்லாத மினி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் ஹரி(வயது 20). இவர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு முதலாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த நிலையில், விடுமுறை நாட்களில் தச்சு வேலை பார்ப்பதற்காக வெற்றி திரையரங்கம் அருகே உள்ள மரம் இழைப்பக ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதிய உணவு வாங்குவதற்காக வெற்றி திரையரங்கம் அருகே நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது தேனியில் இருந்து பூதிபுரம் நோக்கி சென்ற மினி பேருந்து தாறுமாறாக ஓடிய நிலையில் ஹரி மீதும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த ஹரி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பூதிபுரத்தைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் மினி பேருந்தை ஓட்டி வந்த நிலையில், அவருக்கு வலுப்பு ஏற்பட்டதாகவும், அதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் காவல்நிலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான மினி பேருந்து முறையான பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையிலும், முறையான ஆவணங்கள் இன்றி இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் வாகனத்தை ஓட்டிய அஜித் என்பவர் இந்த விபத்து வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தனக்கு வலிப்பு வந்ததாக கூறினாரா அல்லது வாகனம் முறையாக பராமரிக்கப்படாமல் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.