
தூத்துக்குடி கலவரத்துக்குப் பிறகு, தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதால் அறிவித்தபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வன்முறையின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு நடந்து 9 நாட்கள் ஆகின்றன. மேலும், ஆலையை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என அரசாணை வெளியிட்டால்தான் இறந்தவர்களின் உடலைப் பெற்றுக்கோள்வோம் என்று துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். அன்று மாலையே ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது., மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது. ஆனாலும், நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. அது மட்டுமல்லாமல் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு அருகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அறிவிக்கப்பட்டபடி தூத்துக்குடியில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அறிவிக்கப்பட்டபடி பள்ளிகள் நாளை திறக்கப்படும் என்று கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம்பேசிய அவர், தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. மக்கள் வழக்கமாக வெளியில் வந்து செல்ல ஆரம்பித்து விட்டனர். மினி பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்க ஆரம்பித்து விட்டன. எனவே தூத்துக்குடியில் முழுமையாக இயல்புநிலை திரும்பியுள்ளதால், பள்ளிகள் நாளை திட்டமிட்டபடி திறக்கப்படும் என்றார். நகருக்குள் போடப்பட்டுள்ள பாதுகாப்பு படிப்படியாக குறைக்கப்படும் என்றும் இதனால் மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்