
ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவரை 3 பேர் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகி புரத்தைச் சேர்ந்தவர் தங்க கணேஷ். இவரது மகன் தேவேந்திரன் நெல்லையில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். திங்கட்கிழமை வழக்கம்போல பள்ளிக்குச் செல்வதற்காக பேருந்தில் ஸ்ரீவைகுண்டம் வந்துகொண்டிருந்தார்.
பேருந்து அரியநாயகி புரத்தை அடுத்த கெட்டியம்மாள் புரத்திற்கு வந்தபோது மூன்று பேர் பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். பின் பேருந்துக்குள் சென்ற அவர்கள் மாணவர் தேவேந்திரனை வலுக்கட்டாயமாக பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து, அரிவாளால் கண்டபடி வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அரிவாள் வெட்டி பட்டதில் மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மபநாப பிள்ளை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயங்களுடன் கிடந்த மாணவர் தேவேந்திரனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மாணவர் தேவேந்திரன் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கபடி விளையாடும்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தப் பயங்கரத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மாணவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.