
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி காட்சித் தொடர்பியல் துறை, ஆகம் நாடக வெளி மற்றும் திகழ் நிகழ்கலை குழு இணைந்து நடத்திய "ஊர் கூடித் தேர் இழு" வீதி நாடக அரங்கேற்றம் திங்கள் கிழமையன்று கல்லூரி விஸ்காம் ஸ்டூடியோவில் நடைப்பெற்றது. மதுரையின் சித்திரைத் திருவிழாவின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் உயிரோட்டமாக மேடைக்கு கொண்டு வந்த திகழ் நிகழ்கலை குழுவின் கலைத்திறன், பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
கலைகளின் சங்கமம், உணர்வுகளின் வெளிப்பாடு:
பறை-ஆட்டம், ஒயில்-ஆட்டம், கால்-பொம்மலாட்டம், கயிறு-பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து என 10-க்கும் மேற்பட்ட கலை வடிவங்களை ஒருங்கிணைத்து, மதுரையின் கலாச்சாரப் பெருமையை பறைசாற்றியது இந்த நாடகம். தொ. பரமசிவன், சோ. சந்தலிங்கம், சித்திரைவீதிக்காரன் ஆகியோரின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு, கள ஆய்வின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த நாடகம், மதுரையின் கிராமிய வாழ்க்கையை கண்முன் நிறுத்தியது.
நந்தகுமார், பெலிக்ஸ், சாஹானாவின் அசத்தலான நடிப்பு:
திகழ் நிகழ் கலை குழுவின் நந்தகுமார், பெலிக்ஸ் மற்றும் சாஹானா ஆகிய மூவரும் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். ஒவ்வொரு கலைஞரின் உணர்வுப்பூர்வமான நடிப்பும், பார்வையாளர்களின் மனதை ஆழமாகத் தொட்டது.
பார்வையாளர்களின் பரவச அனுபவம்:
"ஒற்றுமையின் மகிமையை உணர்த்திய அற்புதமான நாடகம்," என மாணவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக, இளைய தலைமுறையினர் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை அறிந்து கொண்டது மகிழ்ச்சியளித்தது. நாடகத்தின் இசை, நடனம், மற்றும் நடிகர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு, பார்வையாளர்களை நாடகத்துடன் ஒன்றச் செய்தது. மேலும் கள்ளழகரின் சித்திரை திருவிழா தூத்துக்குடியில் நடந்ததை போல இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கலைஞர்களின் அர்ப்பணிப்பு, சமூகத்தின் பிரதிபலிப்பு:
திகழ் நிகழ்கலை குழுவின் கலைஞர்களின் கடின உழைப்பும், கலை ஆர்வமும், நாடகத்தை வெற்றியடையச் செய்தது. ஆகம் நாடக வெளி அமைப்பை சார்ந்த கார்த்திக் ராஜேந்திரன், சுந்தர கிருஷ்ணன், மற்றும் காமராஜ் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை பேராசிரியர்கள் முனைவர்.ம. சுரேஷ், கு.ஸ்ரீநிவாச மணிகண்டன், மு.மாரீஸ்வரி, எஸ் வைஷ்ணவி, காட்சித் தொடர்பியல் துறை மாணவர்கள் என அனைவரும் இணைந்து இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தினர்.
"ஊர் கூடி தேர் இழு" நாடகம், மத, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, சமூக ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இன்றைய காலகட்டத்தில், இது போன்ற நாடகங்கள் சமூகத்திற்கு மிகவும் அவசியம்.