மாணவர்களுக்கு குட் நியூஸ்..! கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாட்கள் அறிவிப்பு..?

By Thanalakshmi VFirst Published Dec 9, 2021, 1:36 PM IST
Highlights

தமிழகத்தில் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

கொரோனா தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. நோய்தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வுகள் நடத்தப்படாது என்றும் அதற்குபதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பள்ளிகளை தாமதமாக திறந்ததால், பாடத் திட்டத்தில் உள்ள சில பாடங்கள் குறைக்கப்பட்டு, அவை மட்டும் தேர்வில் இடம் பெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் காலாண்டு தேர்வுக்கு பதில், முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடத்த வேண்டிய நிலையில், அந்த தேர்வானது திருப்புதல் தேர்வாக நடைபெற உள்ளது. மேலும் கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தபடும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

2021-22 ஆம் கல்வியாண்டிற்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு பாடத்திட்டங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும். அதன்படி, பன்னிரெண்டாம் வகுப்பை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல் , உயிர் வேதியியல், நுண்ணியிரியல், கணினி அறிவியல், வணிகவியல்,பொருளியல், வரலாறு, புவியியல் உள்ளிட்ட 27 பாடங்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான  திருப்புதல் தேர்வை வரும் 17 ஆம் தேதி துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 17 முதல் 24 ஆம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அதுபோல பன்னிரெண்டாம்  வகுப்பு மாணவர்களுக்கு 17 ஆம் தேதி தமிழ், 18ம் தேதி ஆங்கிலம், 20ம் தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், 21ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பாடங்களும், 22ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண்மை ஆகிய பாடங்களும், 23ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, 24ம் தேதி கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், அரசியல் அறிவியல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்தில் ,ஒமைக்ரான் தொடர்பாக பள்ளிகளில் தளர்வு குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். ஒமைக்ரான் தொடர்பாக பொதுசுகாதார துறையிலிருந்து பள்ளிகல்வித்துறைக்கு எந்த வித அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை என்றும் கூறினார். மேலும் வருகிற பொதுமுடக்கம் தொடர்பான அலோசனை கூட்டத்தில், மருத்துவ குழுவினருடன் கலந்து ஆலோசித்து , ஒமைக்ரான் குறித்து விவாதிக்கபடும். இதில் எடுக்கபடும் முடிவின் அடிப்படையில் பள்ளிகளில் தளர்வுகள் குறித்து  ஆலோசிக்கபடும் என்றும் தெரிவித்தார்.

click me!