
அங்கீகாரம் இல்லாத 746 பள்ளிகளில், பள்ளிக்கல்வி துறை ஆய்வு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில் ஏராளமான குழந்தைகள் இறந்தனர். இச்சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து பள்ளி கட்டிடங்களின் வரைமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும். பாதுகாப்பு இல்லாத கட்டிடங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு சீல் வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத பல பள்ளிகள் செயல்படுவதாக தெரிந்தது. இதையடுத்து அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி ஆய்வு செய்ததில் 746 பள்ளிகள் இருப்பது தெரியவந்தது.
மேற்கண்ட 746 பள்ளிகளை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேற்கண்ட 746 அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு, ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் அறிக்கையை நிராகரித்தது.
மேலும், அங்கீகாரம் இல்லாத 746 தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி டிசம்பர் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி துறைக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், அரசு அதிகாரிகள் குழுவில் 3 கல்வியாளர்களை சேர்க்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.