
தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக பொதுத்தேர்வு இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நோய் தொற்று காரணமாக குறைந்த நாட்களே பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களின் நலன்கருதி பொதுத்தேர்வுக்கு முன்னதாகவே அதன் மாதிரி தேர்வாக திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்தது.
அதன்படி, கடந்த பிப்ரவரி 9-ம் தேதிமுதல் இந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல்திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில்,வந்தவாசி மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள இரு வெவ்வேறு தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வினாத்தாள்களே கசிந்திருப்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கல்வி மாவட்டங்களில், பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் பொன்.குமார் நேரடி விசாரணை மேற்கொண்டு இதை உறுதிசெய்தார். பின்னர், பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் அதற்கான அறிக்கை அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தேர்வு நடைபெறும் நாளன்று பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய கேள்வித்தாள்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சில தினங்களுக்கு முன்பே தேர்வு விதிமுறைகளை மீறி கொடுத்து அனுப்பிய தான் தேர்வுத்தாள் கசிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் திருப்புதல் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அதில் திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் பொதுத்தேர்வில் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றும், அதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. மாணவர்களை பொதுத் தேர்வு எழுதுவதற்கு தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த மாதமும் ஒரு திருப்புதல் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது. 3 மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுதி பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என்று பள்ளிக்கல்வித் துறை கூறியுள்ளது.ஏனென்றால் திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள், பொதுத்தேர்வில் கணக்கீடப்படும் என்பதால் தங்கள் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று சில தனியார் பள்ளிகள் இதுப்போன்று செயல்களில் ஈடுப்படுவதாக கூறப்பட்ட நிலையில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று நடைபெற்ற பிளஸ்2 இயற்பியல் தேர்வுக்கான வினாத்தாளும் கசிந்ததுள்ளது. எனவே குற்றச்சாட்டிற்க்குள்ளான போளூர் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வந்தவாசி இண்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கும் பள்ளிகல்வித்துறை சார்பில் வினாத்தாள் கசிவு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.