தேர்தலில் முறைகேடு - கூட்டுறவு சங்கத் துறை அலுவலகம் முன்பு படுத்துக்கொண்டு போராட்டம்...

First Published Apr 7, 2018, 6:32 AM IST
Highlights
scam in co operative Elections farmers associative sleep in co operative Department


பெரம்பலூர்
 
கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி பெரம்பலூரில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகம் முன்பு விவசாய சங்க பிரதிநிதிகள் படுத்து போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று உள்ளது. இந்கு கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பு மனு பரிசீலனை செய்யாமல் அ.தி.மு.க.வினரை உறுப்பினர்களாக தேர்வு செய்து பெயர் விவரத்தை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதனால், சமீபத்தில் தி.மு.க.வினர் அந்த கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அந்த கூட்டுறவு வங்கி தேர்தலில் மனுத்தாக்கல் செய்து ஒப்புகை சீட்டினை பெற்ற, வேப்பந்தட்டை வட்டம் அகரம் கிராமத்தை சேர்ந்தவரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளருமான ஏ.கே.ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் சாமிதுரை ஆகியோர் கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு குறித்து புகார் அளிப்பதற்காக பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.

அப்போது, அங்கிருந்த பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், தங்களை பார்க்க மறுப்பதாகவும், மாறாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் குற்றம் சாட்டினர். 

பின்னர், கூட்டுறவுத்துறை அலுவலக நுழைவு வாயில் படிக்கட்டில் அந்த இருவரும் படுத்து போராட்டம் நடத்தினர். அப்போது கூட்டுறவுத்துறை அதிகாரிகளை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்து பெரம்பலூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் காவலாளர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்தனர்.

இதனிடையே கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவரும் வெளியே வந்து விவசாய சங்க பிரதிநிதிகளை சமாதானப்படுத்தி அவர்களது புகார் மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக கூறினார். 

இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வி.களத்தூர் கூட்டுறவு வங்கி தேர்தல் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

click me!