எக்காரணத்தை முன்னிட்டும், எச்சூழலிலும், எவர் மீதும் காவல் சித்திரவதை நிகழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தெரிவித்துள்ளது.
காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த காலங்களில் யு-டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறையிலும், ஊடகத்துறையிலும் பணியாற்றும் பெண்கள் குறித்து மிகவும் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது மோசமான மனித உரிமை மீறலே. இதுபோன்ற கருத்துக்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற எழுச்சிமிக்க போராட்டங்களை முன்னெடுத்த பல்வேறு மனித உரிமைப் போராளிகளை இவர் மிகவும் கொச்சைபடுத்தி, கேவலமாக சித்தரித்து சிறுமைப்படுத்திய வரலாறுகளும் உண்டு. இப்போராட்டங்களை ஒடுக்குவதற்காக காவல்துறை நடத்திய சித்திரவதைக் கொடுமைகளை சவுக்கு சங்கர் பல வேளைகளில் நியாயப்படுத்தி, சித்திரவதையை நடத்திய காவல்துறையினருக்கு சார்பாகவே நின்ற வரலாறுகளும் உண்டு.
undefined
பள்ளி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்தில் அப்பள்ளித் தாளாளருக்கு ஆதரவாக எடுத்த அவரது ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை நாம் எளிதில் மறக்க முடியாது. இவ்வளவெல்லாம் இருப்பினும் அவர் சிறைக் காவலில் சித்திரவதைக்கு உள்ளானதை எக்காரணத்தை முன்னிட்டும் இக்கூட்டியக்கம் ஏற்றுக்கொள்ளாது. எந்த வடிவில் சித்திரவதை நிறைவேற்றப்பட்டாலும் அது தடுக்கப்பட வேண்டியது,
சித்திரவதை நிகழ்த்தும் காவல்துறையினரும், சிறைத்துறையினரும் சட்டரீதியாக தண்டிக்கப்பட வேண்டும். இதேபோல பெண் காவலர்களின் மாண்புக்கு இழுக்கு நேரும் வகையில் நேர்காணலை நடத்தியதற்கும் அதனை பதிவேற்றம் செய்தமைக்காகவும் ரெட் பிக்ஸ் ஊடகர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையினர் டெல்லியில் அவரைக் கைது செய்த போது முறையான Transit Warrant" எதுவும் பெறவில்லை. எந்த பிடியாணையுமின்றி டெல்லியில் இருந்து அவர் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்ததும் சட்டப்புறம்பாக சிறையில் அடைத்ததும் மோசமான உரிமை மீறல்களே; இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 20 மற்றும் 22 ஆகியவற்றிற்கு முரணானவையே. அவர் மீது பதியப்பட்டுள்ள குற்றசாட்டுகள் அனைத்தும் ஏழு ஆண்டுக்குள்ளான தண்டனை பெறத்தக்கவை.
இது "அர்னேஷ்குமார் எதிர் பீகார் அரசு வழக்கில்" உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான ஒன்றாகும். (இவர் முறையான பிடியாணை எதுவுமின்றி சட்டப்புறம்பாக கைது செய்யப்பட்டது. டெல்லி விமான நிலையத்திற்கு அலைக்கழிக்கப்பட்டது. பின்னர் தொடர்வண்டியில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது போன்ற அனைத்து தகவல்களையும் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் அறிந்திருக்கிறது. ரெட் பிக்ஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் விலையுயர்ந்த கேமராக்களையும், கணிணிகளையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கையே ரெட் பிக்ஸ் ஊடகத்தை இயங்கவிடாமல் தடுக்கும் திட்டமாகும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கருதுகிறது. எனவே, பெலிக்ஸ் ஜெரால்டு மீதான காவல்துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை கண்டிக்கிறோம். இந்த காவல் சித்திரவதைக் கொடுமைகளை சென்னை உயர்நீதிமன்ற கோடைவிடுமுறை முதல் அமர்வு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு. இது குறித்த அறிக்கைகளை விரைந்து பெற்று சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பொறுப்பாக உள்ள சிறையில் சவுக்கு சங்கரை தொடர்ந்து வைத்திருப்பது ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியுள்ள"மண்டேலா கோட்பாட்டிற்கு எதிரானது. கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று யு-டியூபர் சவுக்கு சங்கர் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்படும் போது ஊடகங்களில் தெரிவித்துள்ளார். எனவே, அவரை உடனடியாக வேறு சிறைக்கு மாற்றம் செய்து, அவரது உயிருக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று இக்கூட்டியக்கம் கேட்டுக்கொள்கிறது.
பெலிக்ஸ் ஜெரால்டை சட்டப்புறம்பாக கைது செய்த காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் பிற காவலர்கள் மீது உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவரை சிறைக்கு அனுப்பிய நீதித்துறை நடுவர் மீதும் சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரை கொடூரமாக சித்திரவதை செய்வதற்கும், மிகக் கேவலமாக நடத்துவதற்கும் காவல்துறையினருக்கு முழு உரிமம் (Licence) வழங்கப்பட்டுள்ளது என்ற பொதுவான சிந்தனைப் போக்கு மக்களிடம் இருந்தும் மாற்றப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.