
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் திமுக அரசில் நிகழும் தவறுகளை தொடர்ந்து சவுக்கு யூடியூப் சேனலில் வீடியோவாகப் பகிர்ந்து வருகிறார். சவுக்கு சங்கர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குகிறார், குறிப்பாக அரசு விமர்சனங்களால்.
மே 2024: ஒரு நேர்காணலில் பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறான கருத்துகள் சொன்னதாகக் குற்றத்திற்காக கோவை சைபர்கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர்.
டிசம்பர் 2024: குண்டர் சட்டத்தின் கீழ் (Goondas Act) கைது. திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு எதிரான தனது விமர்சனங்களால் 7 வழக்குகளில் சிக்கினார். இதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் சென்ட்ரல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் கைது என்ற பெயரில் இன்று வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தமிழக காவல் துறை என்னை கைது செய்யும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. நான் எந்த நேரம் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். எந்த வழக்கில் விசாரணைக்கு அழைக்கின்றீர்கள் என கேட்டால் காவலர்கள் விளக்கம் அளிக்க மறுக்கின்றனர்.
நான் கைது செய்யப்பட்டால் மீண்டும் வெளியில் வர குறைந்தபட்சம் 3 முதல் 6 மாதங்கள் எடுக்கலாம். ஏனெனில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் என் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. அதன்படி ஒரு வழக்கில் கைது, வாய்தா, விசாரணை என அடுத்தடுத்த வழக்கில் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். தேர்தல் முடிவடையும் வரை என்னை வெளியில் விடக்கூடாது என்ற முனைப்பில் திமுக அரசு உள்ளது என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.