
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தனர். இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் இருவரையும் சட்டவிரோதமாக கைது செய்த காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதில் இருவருமே அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரித்த நிலையில் பின்னர் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.
வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட காவலர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று மதுரை கிளை நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால் சம்பவம் நடைபெற்று 5 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் விசாரணை நிறைவு பெற்றதாக இல்லை. இது பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தாம் அரசு தரப்பு அப்ரூவராக மாறப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், சம்பவத்தின் போது எந்தெந்த காவலர் என்ன செய்தார் என்ற முழு தகவலையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காவல் ஆய்வாளரின் இந்த திடீர் மனு வழக்கின் விசாரணையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆய்வாளரின் மனு தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.