
சசிகலா மற்றும் ஓபிஎஸ் இடையே நடக்கும் அதிகாரப் போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. தங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார் என இரு தரப்பினரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஓபிஎஸ் அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவால் உருவான இந்தக் கட்சிக்கு குந்தகம் ஏற்படுமே என பல கொடுமைகளை தாங்கிக் கொண்டதாக குறிப்பிட்டார்.
தான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் தன்னை முதலமைச்சராக்கி ,சசிகலா குடும்பத்தினர் தன்னை அவமானப்படுத்தினர் என தெரிவித்தார்.
15 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினரால் தொடர்ந்து தான் துன்பப்பட்டு வந்ததாகவும், கட்சியைக் காப்பாற்றவே தற்போது தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
தான் தனியாக நின்று போராடுவதை பலர் பெருமையோடு பார்க்கின்றனர் என்றும் மக்களின் ஆதரவு எங்கள் பக்கமே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது, அவரது ரத்த உறவான தீபாவை மருத்துவமனைக்குள் ஏன் அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பிய ஓபிஎஸ், ஜெயலலிதா மரணமடைந்த பின்னரும் வாசலில் நின்று கதறிய தீபாவை வீட்டுக்குள் அனுமதிக்க சசிகலா ஏன் மறுத்தார் என சந்தேகம் எழுப்பினார்.
கூவத்தூரில் அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் ஆதரவும் தன் பக்கம் தான் இருக்கிறது என்றும் தங்களது பெரும்பான்மையை. சட்டசபையில் நிரூபிப்போம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
சசிகலா முதலமைச்சராக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை சசிகலாவின் உறவினர்களை அனுமதிக்கவில்லை என ஓபிஎஸ் குறிப்பிட்டார்.