
ஆம்பூர்,
கே.சி.வீரமணி, ஆட்சி அமைக்க யாருக்கு ஆதரவு தருகிறாரோ அவருக்கே எங்களது ஆதரவு என்று கூவத்தூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த ஆம்பூர் எம்.எல்.ஏ.பாலசுப்பிரமணி தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிய அரசை அமைப்பதில் காபந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் தங்கள் தரப்புக்கு ஆதரவுகளை திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சசிகலாவுக்கு ஆதரவு தரும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் பரவியதைத் தொடர்ந்து சசிகலாவும் அந்த சொகுசு பங்களாவுக்கு சென்று ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் தனித்தனியாக அழைத்து கருத்துகளை கேட்டு அறிந்தார்.
இந்த நிலையில் கூவத்தூர் சொகுசு பங்களாவில் இருந்த வேலூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணி நேற்று தனது சொந்த ஊரான ஆம்பூருக்கு வந்து இருந்தார்.
இதனால் அவர் வேறு ஏதும் முடிவு எடுத்துள்ளாரோ என பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அ.தி.மு.க. தொண்டர்களும், பத்திரிகையாளர்களும் அங்குச் சென்றனர். அப்போது அவர் தனது மகளின் காதணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“கூவத்தூர் விடுதியில் யாரையும் அடைத்து வைக்கவில்லை. அனைவரும் அங்கு சுதந்திரமாக உள்ளோம். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா சனிக்கிழமையன்று தனித்தனியாக எங்களை சந்தித்து பேசினார்.
வேலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கே.சி.வீரமணி என்ன முடிவு எடுக்கிறாரோ அதன்படிதான் நாங்கள் செயல்படுவோம். ஏனெனில் இதுவரை அவர் சொல்வதைதான் செயல்படுத்தி வந்தோம். அதனால் அவர் முடிவுதான் எங்கள் முடிவும்”
என்று அவர் கூறினார்.
பின்னர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று தனது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
அவர் தனது வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தலைமையிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, சென்னையில் இருந்து காவல் பாதுகாப்புடன் ஆம்பூர் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.