தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டத்தைச் செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் தரத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தப்படும். முதல்வர் அறிவித்த திட்டங்களான நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மற்றும் திறன் மேம்பாட்டு வளர்ச்சி திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களால் மாணவர்களின் எண்ணிக்கை பல்கலைக்கழகங்களில் அதிகரித்துள்ளது, இதேபோல் அதன் தரமும் உயர்த்தப்படும்.” என்றார்.
உயர் கல்வி துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றபட உள்ளது என தெரிவித்த அமைச்சர் பொன்முடி, “தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும். 2023-24-ம் கல்வியாண்டில் இருந்தே பொது பாடத்திட்டம் கலை அறிவியல் கல்லூரிகளில் அறிவிக்கப்பட்டுவிடும். புதிதாக ஏதாவது பாடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தால், அதற்கான பாடத்திட்டங்கள் இந்தாண்டு வரையறுக்கப்பட்டு, 2024-25ம் கல்வியாண்டில் இருந்து நிறைவேற்றப்படும். மாணவர்கள், பேராசிரியர்கள் கல்லூரிகள் மாறும் போது அவர்களுக்கு ஒரே பாடத்திட்டம் எளிதாக இருக்கும். அரியர் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் பொருந்தாது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிப்பு- எந்த எந்த மாவட்டங்கள் என தெரியுமா.?
தொடர்ந்து பேசிய அவர், “பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தர பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறையில் பணியிடங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. அந்த குழுவில், துணைவேந்தர், அரசு நியமன உறுப்பினர், உள்ளிட்ட 4 முதல் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் மூலம் இந்த பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கும் துணைவேந்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.” என்றார்.
மேலும், “முதல்வர் ஸ்டாலின், 4000 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆணை வழங்கியுள்ளார். அதன்படி, 4,000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பேரில், முதல்வர் அனுமதி வழங்கிய நிலையில், ஊதியமும் ரூ.20,000 இலிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.” என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.