அவதூறுகளை அள்ளி வீசும் எடப்பாடி.! தேர்தலில் தோற்கடித்துக் கரியைப் பூசப் போவது உறுதி- ஆர்.எஸ்.பாரதி

Published : May 08, 2025, 03:30 PM IST
அவதூறுகளை அள்ளி வீசும் எடப்பாடி.! தேர்தலில் தோற்கடித்துக் கரியைப் பூசப் போவது உறுதி- ஆர்.எஸ்.பாரதி

சுருக்கம்

திமுக அரசின் நான்காண்டு ஆட்சியை எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு, ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். மகளிர் நலத்திட்டங்கள், சட்டம் ஒழுங்கு, அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.

எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

திமுக அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சட்டம் ஒழுங்கு, ஊழல், கள்ளச்சாரய மரணம் என பட்டியலிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 1.15 கோடி மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை! ரூ.10,160.63 கோடியில் 662 கோடி முறை பயணம் பெண்கள் விடியல் பயணம்! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் மூலம்  ரூ.721 கோடி வழங்கப்பட்டு 4,83,000 கல்லூரி மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்!

திமுக அரசின் திட்டங்கள்- பட்டியலிட்ட ஆர்.எஸ் பாரதி

இவ்வாறு மக்கள் நலத் திட்டங்கள் மூலம் திராவிட மாடல் அரசு பெண்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விழி பிதுங்கி, தனது டெல்லி எஜமானர்களின் வழியில் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளிக் கொண்டுவந்து அரசியல் செய்யப் பார்க்கிறார் பழனிசாமி.

நாடு போற்றும் நான்காண்டு திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டு மக்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கைக் கண்டு விரக்தியின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார் பழனிசாமி! திமுக மக்களிடம் அடைந்துள்ள செல்வாக்கால், 2026 தேர்தலில் மட்டுமல்ல, இனி எந்தத் தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்விதான் என்னும் வயிற்றெரிச்சலில், வடிகட்டிய பொய்களைத் திரட்டி புலம்பியிருக்கிறார் புலம்பல் சாமி! அதிமுக ஆட்சியின் கையாலாகத்தனத்திற்குச் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு 200 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த கொடூரமே சான்று! பழனிசாமியின் ஆட்சியில் சென்னை மாநகரம் பருவ மழைக் காலத்தில் மிதந்து தத்தளித்தது என்பதைப் பாதக ஆட்சி நடத்திய பழனிசாமி மறக்கலாம்! மக்கள் மறக்கமாட்டார்கள்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு- திமுக விமர்சனம்

ஆவடி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் பெண் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் அற்ப நோக்கில், அந்தக் காவலரை நேற்றைய தினமே உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்ததை மறைத்து விட்டு, பேட்டி என்ற பெயரில் அரசியல் நாடகமாடிச் சென்றுள்ளார் அற்ப பேர்வழி பழனிச்சாமி. இப்படி கதை கதையாக அடித்து விட்டு அதை தமிழ்நாட்டு மக்கள் நம்புவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் இல்லையா? எங்கள் காதுகளும் பாவம் இல்லையா?

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இழுத்தடித்த இழிவான ஆட்சியல்ல இது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர் “எவராக இருந்தாலும்” சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சி இது. பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன? என்று கேட்கிற அளவிற்குச் சட்டம் ஒழுங்கு மரணப் படுக்கையில் இருந்தது.

தமிழ்நாட்டுன் மனசாட்சியை உறைய வைத்துப் பொள்ளாட்சி கொடூரம்! பேராசிரியரே மாணவிகளைப் பாலியல் தொழிலுக்குள் தள்ளப் பார்த்த நிர்மலாதேவி விவகாரம்! சென்னை வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்! இவ்வாறு பட்டியிட ஆரம்பித்தால் பக்கங்கள் பத்தாது, தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாப்பில்லாமல் அச்சுறுத்தல் மிக்கச் சூழலில் வைத்திருந்ததுதான் அதிமுகவின் அவல ஆட்சி.

காவலர் கொலை- அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு

பரமக்குடி இமானுவேல் சேகரன் குருபூஜையில் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொலை! காவல் ஆய்வாளர் ஆல்பில் சுதன் சமூக விரோதிகளில் குத்திக் கொலை! மரக்காணத்தில் நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகள் சேதம், தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகள் சூறையாடி தீ வைப்பு! தூத்துக் குடி கீழ வல்லநாட்டில் கல்லூரி முதல்வர் சுரேஷ் கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொலை! இளம் பெண் சுவாதி பட்டப் பகலில் ரெயில்வே நிலையத்தில் வெட்டிக் கொலை! கூடங்குளம் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் மீது ஈவிரக்கமற்ற அடக்குமுறைகள்! சாதி ஆணவக் கொலைகள்! சல்லிக் கட்டுப் போராட்டத்தில் காவல்துறையே வாகனங்களுக்குத் தீவைத்த அவலம்! நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த சாத்தன் குளம் தந்தை- மகன் காவல் நிலைய மரணம்! மிகக் கொடுரமாக நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் துப்பாக்குச் சூட்டில் 13 பேர் மரணம்!

திமுக ஆட்சியில் குற்றவாளிகள் பட்டியல்

இவ்வாறு சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கேடுகெட்ட அடிமை ஆட்சியைப் நடத்திய பழனிசாமி, திராவிட மாடல் அரசை பார்த்துக் குற்றம் சொல்வதற்கு தகுதி இல்லை. பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சீரழிந்து போயிருந்த சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்தி நிலையான ஆட்சியை வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு! அதிமுக ஆட்சியில் அதிகபட்சமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ரவுடிகள் 1,929 பேர் என்றால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 3,645 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். A மற்றும் A+ ரவுடிகளின் எண்ணிக்கை 50 விழுக்காடாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

நான்காண்டு காலத் திராவிட மாடல் ஆட்சி மக்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கை கண்டு பொறுக்காமல் பிதற்றும் பழனிசாமியின் கபட நாடகங்கள் மக்களிடம் ஒருநாளும் வெற்றிப் பெறாது. சரித்திரம் போற்றும் சாதனைகளைத் தந்துள்ள நான்காண்டு திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் தொடரப் போகிறது என்ற உண்மையை ஏற்க முடியாமல் அவதூறுகளை அள்ளி வீசி வரும் பழனிசாமியின் முகத்தில் தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் தோற்கடித்துக் கரியைப் பூசப் போவது உறுதி என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது.. அமித் ஷாவுக்கு சவால் விட்ட ஸ்டாலின்
என்ஜின் இல்லாத கார் அதிமுக.. எவ்ளோ தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது.. பழனிசாமியை புரட்டி எடுத்த உதயநிதி!!