ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆஜராக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கால அவகாசம் கோரியுள்ளார்
பாஜக மாநில துணைத் தலைவராகவும், அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராகவும் இருப்பவர் நயினார் நாகேந்திரன். நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரன், மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னதாக, சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6ஆம் தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான, பணத்தை கொண்டு சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை எடுத்து சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஏப்ரல் 22ஆம் தேதி (இன்று) நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆஜராக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கால அவகாசம் கோரியுள்ளார். தாம்பரம் காவல் நிலைய போலீசார் இன்று ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில், 10 நாட்கள் அவகாசம் கோரி நயினார் நாகேந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார். தாம்பரம் ஆய்வாளர் பால முரளியை சந்தித்து அந்த கடிதத்தை நயினார் நகேந்திரனின் வழக்கறிஞர் வழங்கினார்.
முன்னதாக, ரயிலில் சிக்கிய பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இதனிடையே, பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திருநெல்வேலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ராகவன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் என தனது மனுவில் தெரிவித்துள்ள அவர், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம் மனு அளித்ததாகவும், ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணையின்போது, பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது என அமலாக்கத்துறை சார்பாக வாதிடப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விரிவான பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினத்துக்கு விசாரணையை தள்ளி வைத்தது.