
விழுப்புரம்
விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள இரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க இருப்பதை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள இரயில்வே மேம்பாலத்தில் இரண்டு முறை திடீரென சாலை உள்வாங்கி 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.
இதனையடுத்து மக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த இரயில்வே மேம்பாலத்தைச் சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மேம்பால சீரமைப்புப் பணி ஓரிரு நாள்களில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக மேம்பாலம் அருகே மாற்றுப் பாதைக்கான வரைபடங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று காலை நேரில் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இரயில்வே மேம்பால சீரமைப்பு பணி நடைபெற உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேம்பால சீரமைப்பு பணி நடைபெற உள்ளதால் மாற்றுப் பாதைக்கான வழிமுறைகள் குறித்தும், மேம்பாலம் அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க உள்ள இடத்தில் குடிநீர், நிழற்குடை வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்ய வேண்டியது பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைவில் தொடங்கி விரைந்து முடிக்குமாறும் உத்தரவிட்டார்.
அதனத் தொடர்ந்து விழுப்புரம் – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள இரயில்வே கேட் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளையும் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.
பின்னர், விழுப்புரத்தில் அமைக்கப்பட உள்ள அரசு சட்டக்கல்லூரி மற்றும் மகளிர் கலைக் கல்லூரிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் பின்புறம் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை பார்வையிட்டார். அதன் பிறகு அமைச்சர் சி.வி.சண்முகம், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியது: “விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள இரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளதால் அதுகுறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தேன். இந்த மேம்பால சீரமைக்கும் பணியின்போது மக்களுக்கு சிரமம் ஏற்படும். அந்த சிரமத்தை பாராமல் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இரயில்வே மேம்பால பணி முடிய அதிகபட்சமாக நான்கரை மாதம் வரை ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.
அதேபோல், கோலியனூரான் வாய்க்காலை சீரமைத்து செப்பனிட ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேம்பால சீரமைக்கும் பணி தொடங்கும்போது கோலியனூரான் வாய்க்கால் பணியும் தொடங்கப்படும்” என்று அவர் கூறினார்.