
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக, காயமடைந்த மற்றொரு காவலாளி மூலம், கோவை சிறையில், அடையாள அணிவகுப்பு நடத்த நீலகிரி மாவட்ட காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்த, 11 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த காவலாளி ஓம் பகதுாரை கொலை செய்துவிட்டு மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதுாரை தாக்கியது.
படுகாயங்களுடன் அந்த கும்பலிடம் இருந்து உயர் தப்பிய அவர் சிகிச்சை பெற்று தற்போது, பணிக்கு திரும்பியுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த மனோஜ், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், சங்கனாசேரியைச் சேர்ந்த சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் ஜம்சீர் அலி, ஜிதின் ஜோய் ஆகியோர், மோசடி வழக்கில், கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு, மஞ்சேரி சிறையில் உள்ளனர்.
இந்த இருவரையும், கோவை மத்திய சிறைக்கு மாற்றும் முயற்சியில், நீலகிரி போலீசார் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கி காயமடைந்த சயானின் உடல்நிலை தேறி விட்டதால், அவனை கைது செய்து, சிறையில் அடைக்க தேவையான நடவடிக்கைகளை, போலீசார் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பின், காவலாளி கிருஷ்ண பகதுாரை சிறைக்கு அழைத்து சென்று, அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.