
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரியில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு ஓராண்டு ஆகியும் தொடங்கப்படாமல் இருக்கும் சுரங்க நடைபாதை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்று முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் ஆட்சியரிடம் தெரிவித்துள்ளார்.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்நாள் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில், கோரிக்கை மனு கொடுப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
ஆட்சியர் ராமனும், வி.எஸ்.விஜய்யும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது வி.எஸ்.விஜய் இரண்டு கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் கொடுத்தார்.
அதில் ஒரு மனுவில், “2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்.டி.ஓ. சாலை எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் விதமாக சுரங்க நடைபாதை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
அதை நிறைவேற்றும் விதமாக தேசிய நெடுஞ்சாலைத் துறையால் சுரங்க வழிப்பாதை அமைப்பதற்கு செங்குந்தர் சமுதாயம் சார்பில் இடமும் ஒதுக்கப்பட்டது. அந்த சுரங்கப்பாதை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றது. அதன்பிறகு 2016 சட்டமன்ற தேர்தலால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. ஓராண்டாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை.
நாள்தோறும் இந்தப் பகுதியில் சாலை விபத்துகள் நடப்பது தொடர்கிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துடன் சாலையை கடக்கின்றனர். ஆகவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சுரங்கப்பாதை பணியை தொடங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இரண்டாவது மனுவில், “2011 முதல் 2016 வரை வேலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில், தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பெருமுகை ஊராட்சியில் ஜெயலலிதா பெயரில் ரூ.87½ இலட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் திருமண மண்டபம், சத்துவாச்சாரி அறிவியல் பூங்கா வளாகத்தில் எம்.ஜி.ஆர்.பெயரில் ரூ.65 இலட்சத்தில் நவீன வசதிகளுடன் நீச்சல் குளம், வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ரூ.30 இலட்சத்திலும், பழைய பேருந்து நிலையத்தில் ரூ.20 இலட்சத்திலும் நவீன வசதிகளுடன் கூடிய குளியல் அறை மற்றும் கழிப்பிடம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இந்தத் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.
பின்னர், சத்துவாச்சாரியில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்று ஆட்சியரிடம் அவர் திட்டவட்டமாக கூறினார்.