
கன்னியாகுமரி
ஓகி புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.15 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று காங்கிரசார் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தி உள்ளனர்..
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரசு தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமையில் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், மகேஷ் லாசர், அலெக்ஸ், உதயம் உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தனர்:
அந்த மனுவில், "ஒக்கி புயல் பாதிப்பால் குமரி மாவட்டத்தில் வாழை மரங்கள், தென்னை மரங்கள் முறிந்து சேதமடைந்துவிட்டன. சுமார் ரூ. 1300 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
வீடு இழந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
கடலில் மீன் பிடிக்கச்சென்று கரை திரும்பாத மீனவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடற்கரையில் வசிக்கும் மீனவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.
புயலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.15 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்" என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.