
ஓகி புயல் காரணமாக, தொடர்மழை பெய்து வருவதால் குமரி மாவட்டம் வெள்ளக்காடாக மாறி உள்ளது. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஓகி புயல் காரணமாக கன்னியாக்குமரி, நெல்லை மாவட்டங்களில் சாலையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சுமார் 3500க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சரிந்தன. இதனால் மாவட்டம் முழுவதும் இன்று 2 வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இரண்டு மாவட்டஙகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் ரயில் தண்டவாளங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 2000த்துக்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. பல இடங்களில் குளங்கள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருவதால், கரையோர பகுதி மக்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நாகர்கோவிலை அடுத்த கார்த்திகை வடலி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(38) மீது மரம் முறிந்து விழுந்து இறந்தார்.
இதேபோல் ஈத்தாமொழி அருகே பால்கிணற்றான்விளை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (55) மீது தென்னை மரம் முறிந்து விழுந்து பலியானார்.
மண்டைக்காடு பகுதியை சேர்ந்த சரஸ்வதி மரம் முறிந்து விழுந்து பலியானார். களியக்காவிளை அருகே பரக்குன்று காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர்(55) பெரிய பனை மரம் விழுந்து பலியானார்.
இந்நிலையில் இன்று காலை ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அமல்சிங்(23) என்ற தொழிலாளி, கீரிப்பாறை ரப்பர் தோட்டத்தில் பணியில் இருந்தபோது மரம் முறிந்து விழுந்து இறந்தார்.