
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் விஜயக்குமார். 28 வயதான இவர் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
காசிமேடு துறைமுக காவல்நிலையத்தில் விஜயக்குமார் மீது 8 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் கடந்த 2013 ஆம் ஆண்டு செய்த குற்ற சம்பவத்திற்காக கடந்த 29 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
அப்போது மதியத்திற்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் மதிய உணவு சாப்பிட ரவுடி விஜயக்குமார் நீதிமன்றம் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
அவரை நோட்டமிட்டு காத்திருந்த மர்ம கும்பல் ஒன்று முத்தியால் பேட்டை பவளக்கார தெருவில் நடந்து சென்றபோது ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.
கொலை செய்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் போலீசாரிடம் கிடைத்தது.
இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதைதொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜூவ் பிரின்ஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் நேற்று இரவு திருவொற்றியூரில் பதுங்கி இருந்த முனுசாமி (22), வெங்கடேசன் (24), கணேசன் (26), மோகன்ராஜ் (26), அப்துல் சபீர் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், விஜயக்குமாரும் வண்ணார்பேட்டையை சேர்ந்த அவரது நண்பர் அப்பு என்ற சிட்டிசனும் சேர்ந்து கஞ்சா அடிப்பது, பல்வேறு பகுதிகளுக்கு சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வது, அடிதடி வழக்குகளில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் செய்து வந்தனர்.
இதனிடையே அப்பு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் விஜயக்குமார் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பு விஜயக்குமாரை கண்டித்தும் அவன் கேட்கவில்லை.
மேலும் அப்புவின் காதலியும் அவனை விட்டு பிரிய தொடங்கி விஜயக்குமார் காதல் வலையில் விழுந்தாள்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பு கடந்த 2014ம் ஆண்டு விஜயக்குமாரை கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது, இருவரும் அடிதடி வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தனியாக விஜயக்குமாரை எதிர்க்க முடியாது என்று உணர்ந்த அப்பு விஜயகுமாரை கொலை செய்ய கடந்த ஓராண்டாக திட்டம் தீட்டியுள்ளார்.
இந்நிலையில், தன் நண்பர்கள் மூலம் அப்பு அந்த பழியை தீர்த்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி அப்பு உட்பட 4 பேர் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.