
தமிழகத்தில் டிச.,2, 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதி ஏரிகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில், தமிழகத்தில் டிச.,2, 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் வடதமிழகம், தெற்கு ஆந்திரா இடையே வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயரும் எனவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் பொன்னையாறு, பாலாறு, கொசஸ்தலை, பாபநாசம், மணிமுத்தாறு, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளத்தில் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் டிச.,5 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய துவங்கும் எனவும் கனமழை காரணமாக சோமசீலா, கண்டலேறு அணைகள், சொர்ணமுகி, களிங்கி ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.