வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - ஒ.பி.எஸ் அணியின் முன்னாள் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை

First Published Apr 17, 2017, 4:59 PM IST
Highlights
Rs 1.15 crore disproportionate assets case


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்திற்கு சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழக கல்வி அமைச்சராக இருந்தவர் அரங்கநாயகம். இவர் தற்போது ஒ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளார்.

இவர் அமைச்சராக பதவி வகித்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.15 கோடி ரூபாய்க்கு சொத்துச் சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அரங்கநாயகம், அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தான பாண்டியன், முருகன் அதியமான் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2006-ம் ஆண்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அரங்கநாயகம் உள்ளிட்ட 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

மனுதாரர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதால், வழக்கில் இருந்து இவர்களை விடுவிக்க முடியாது எனவும் அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்யவும் முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இதுகுறித்த விசாரணை முடிவுற்ற நிலையில் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்திற்கு சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் இருந்து அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தான பாண்டியன், முருகன் அதியமான் ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

click me!